மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த அஜித் யாதவ் என்பவருக்கும், மஹக் யாதவ் என்ற பெண்ணுக்கும் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. பந்தல், சாப்பாடு, பேண்ட் வாத்தியம் என சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து திருமண வேலைகள் மும்முரமாக நடந்து வந்தன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு அஜித்தின் செல்போனுக்கு வந்த ஒரு அழைப்பு இடியாய் இறங்கியது.

போனில் பேசிய சச்சின் விஸ்வகர்மா என்பவர், “மஹக் எனது காதலி, அவரைத் திருமணம் செய்தால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என மிரட்டியுள்ளார். வெறும் மிரட்டலோடு நிற்காமல், மஹக் உடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் ஆடியோ பதிவுகளையும் சச்சின் அனுப்பியுள்ளார்.

மேலும், தங்களுக்குள் உடல் ரீதியான உறவு இருந்ததாகவும், ஒருமுறை கருக்கலைப்பு செய்திருப்பதாகவும் கூறி அஜித்தின் தலையில் இடியை இறக்கினார். இதுகுறித்து பஞ்சாயத்து கூட்டி மஹக்கிடம் கேட்டபோது, “அவன் வெறும் நண்பன் தான், திருமணத்திற்குப் பிறகும் அவனிடம் பேசுவதை நிறுத்த மாட்டேன்” என அந்தப் பெண் அடம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தினர்.

ஆனால், கதை இத்துடன் முடியவில்லை. பெண் வீட்டார் முதலில் செலவுத் தொகையைத் தருவதாகக் கூறிவிட்டு, பின்னர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அஜித் மீது வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமைப் புகாரை அளித்துள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டது மட்டுமன்றி, தற்போது பொய்ப் புகாரால் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அஜித் காத்துக் கிடக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.