மகாராஷ்டிரா மாநிலம் தாரா ஷிவ் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, லந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி, அருகிலுள்ள பள்ளியில் கல்வி பயின்று வந்தார். எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழ்ந்த இந்த சிறுமி விடுதி ஊழியர் ஒருவரால் தொடக்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் விடுதி உரிமையாளர் ரவி பாபட்லா, கண்காணிப்பாளர் ரச்சனா பாபட்லா, ஊழியர்கள் அமித் மகாமுனி மற்றும் பூஜா வாக்மாரி ஆகியோர் சேர்ந்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்தனர்.
இக்கொடூர சம்பவத்தை ஏனைய அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்க முயற்சித்த அந்த சிறுமியின் கடிதத்தை விடுதி நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர். சமீபத்தில் சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்தனர். அதையடுத்து, பெரும் அதிர்ச்சியில் சிறுமி, தனக்கு நடந்த வன்கொடுமை குறித்து நேரடியாக போலீசில் புகாரளித்தார்.
சிறுமியின் புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கையில் தீவிரம் காட்டி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதன்படி, விடுதி உரிமையாளர், கண்காணிப்பாளர் மற்றும் இரண்டு ஊழியர்கள் என நால்வரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
