மும்பையில் உள்ள சினிபோலிஸ் திரையரங்கில் ‘சோ லாங் வேலி’ என்ற திரைப்படம் வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில், நடிகை ருச்சி குஜ்ஜார் நேரில் வந்து, தயாரிப்பாளர் மற்றும் நடிகரான மான் சிங்கை செருப்பால் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியின் போது சத்தம் போட்டு கொண்டே எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட ருச்சி, தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட ரூ.25 லட்சம் மோசடி விவகாரத்துக்கு நீதி கோரி போராட்டமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

நிகழ்வின் போது, ருச்சிக்கு ஆதரவாக வந்த குழுவினர் தயாரிப்பாளர்களின் புகைப்படங்களை கொண்ட பதாகைகள் மற்றும் அவமானப்படுத்தும் சுவரொட்டிகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். வைரலான வீடியோவில், ருச்சி திட்டமிட்டு தியேட்டரில் போராட்டம் நடத்துவதை பார்க்க முடிகிறது. இது திரையரங்கில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ருச்சி அளித்த புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர் கரண் சிங் சவுகான், ஒரு தொலைக்காட்சி தொடருக்காக தன்னை இணை தயாரிப்பாளராக சேர்த்ததாகவும், அதற்காக ரூ.25 லட்சம் பணம் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்தத் தொடர் தொடங்காமல் விட்டதோடு, அந்த நிதி ‘சோ லாங் வேலி’ திரைப்படத்துக்கே பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில், பணம் திருப்பித் தரக் கேட்டபோது, தயாரிப்பாளர் தன்னை மிரட்டியதாகவும் ருச்சி தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில், சவுகானுக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 318(4), 352 மற்றும் 351(2) இன் கீழ் மும்பை போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். ருச்சி, பண பரிவர்த்தனை தொடர்பான வங்கி ஆவணங்களையும் போலீசிடம் வழங்கியுள்ளார்.

தற்போது நிதி மோசடி, மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் கேன்ஸ் விழாவில் பிரதமர் மோடியின் புகைப்படம் கொண்ட நெக்லஸ் அணிந்து வைரலான நடிகை ருச்சி குஜ்ஜார், தற்போது இந்த விவகாரத்தால் மீண்டும் தலைப்புச்செய்தியாகி இருக்கிறார்.