பீகார் மாநிலத்தின் போத்கயா பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊர்காவல் படையில் சேருவதற்கான உடல் தகுதி தேர்வின் போது மயங்கி விழுந்த 26 வயது பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸில், ஓட்டுநர் மற்றும் டெக்னீசியன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
ஜூலை 24ம் தேதி போத்கயா அணிவகுப்பு மைதானத்தில், ஊர்காவல் படை பணிக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற 26 வயது பெண் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அந்த பயணத்தின் போதே கொடூரம் நிகழ்ந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் டெக்னீசியன் அஜித் குமார் ஆகிய இருவரும், சுயநினைவற்ற நிலையில் இருந்த அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. சுயநினைவு திரும்பிய பிறகு அந்த பெண் அளித்த புகாரில், “ஆம்புலன்ஸில் என்ன நடந்தது முழுமையாக ஞாபகம் இல்லை. ஆனால் இரண்டு முதல் மூன்று பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்” என கூறியுள்ளார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார், சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தனர். அணிவகுப்பு மைதானம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. குற்றச்செயலில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணி இரண்டு மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வினய் குமார் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். குற்றம் நடந்த இடத்தில் தடயவியல் குழு ஆய்வு மேற்கொண்டு, ஆம்புலன்ஸ் மற்றும் அதன் உள்ளே உள்ள பகுதிகளில் இருந்து முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியுள்ளது. தற்போது இருவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, தீவிரமாக விசாரிக்கப்படுகின்றனர்.
இந்த சம்பவம் பீகார் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் பரிசோதனையில் பங்கேற்ற பெண்கள் பாதுகாப்பற்ற நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கோபமும், வருத்தமும் மக்களிடையே எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவையில் கூட பெண்கள் பாதுகாப்பில் இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இது குறித்து அரசின் மேல்மட்ட விசாரணையும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
