கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவிலிருந்து கொண்டம்பட்டி செல்லும் சாலையில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று மதியம் தென்னை நார் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நார் பிரித்து எடுக்கும் இயந்திரத்தில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனை பார்த்ததும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். உடனடியாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.