குஜராத் அகமதாபாத் நகரத்தில் உள்ள தனிலிம்டா போலீஸ் குடியிருப்பில் நடந்த கொடூர சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ பிரிவு போக்குவரத்து போலீசில் பணியாற்றி வந்த முகேஷ் பர்மர் என்பவரும், அவரது மனைவி சங்கீதாவும் இந்த குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.
இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக திருமண வாழ்வில் மோதல் நிலவி வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை, இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதில், கோபத்தில் சங்கீதா, கணவரை மரக்குச்சியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் முகேஷ் பர்மர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் போது தம்பதியரின் 7 வயது மகன் வீட்டில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கணவரை கொன்ற பின்னர், சங்கீதா வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டபோது, சங்கீதா எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டது. அதில், நீண்ட கால திருமணத் தகராறும், நிதிச் சிக்கல்களும் தான் இந்த முடிவுக்கு காரணமாக இருந்ததாக பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருவதாக அகமதாபாத் துணை காவல் ஆணையர் ரவி மோகன் சைனி தெரிவித்துள்ளார். தாயும், தந்தையும் ஒரே நாளில் உயிரிழந்த நிலையில், அவர்களின் சிறுவன் தற்போது குடும்பத் தோழர்களின் பராமரிப்பில் வைத்துள்ளார். இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
