இந்திய துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் ஜாம்பவானும், புகழ்பெற்ற ஒலிம்பிக் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள மரணங்கள் விளையாட்டு உலகினரையும், ரசிகர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளன. கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஜஸ்பால் ராணா மாரடைப்பால் காலமான சோகம் தணிவதற்குள்ளாகவே, அடுத்த 16 நாட்களிலேயே அவரது தாயார் ஷியாமா தேவி ராணாவும் டெல்லியில் நேற்று (ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

மிகவும் உருக்கமான விஷயம் என்னவென்றால், அவர் மறைந்த ஜூன் 28-ஆம் தேதி தான் ஜஸ்பால் ராணாவின் 50-வது பிறந்தநாளாகும். மகனின் பிறந்தநாளன்றே தாயின் உயிரும் பிரிந்திருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலை குலையச் செய்துள்ளது. ​ஷியாமா தேவி ராணா நீண்ட நாட்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் 12-ஆம் தேதி அவரது மகன் ஜஸ்பால் ராணா திடீரென மரணமடைந்த செய்தி அவருக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஜூன் 16-ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் (Army Hospital) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது. இந்த இரட்டை இழப்பு குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் பக்கத்தில், பத்மஸ்ரீ விருது பெற்ற ஜஸ்பால் ராணாவின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தாங்கும் சக்தியை அந்தக் குடும்பத்தினருக்கு இறைவன் வழங்க வேண்டும் என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.