சென்னையில் நடைபெற்ற நியூஸ் 18 குழுமத்தின் ‘டவுன்ஹால்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, 2026 சட்டமன்ற தேர்தல் குறித்துப் பல அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொண்ட அவர், விஜய் இன்னும் தீவிரமாகத் தேர்தல் களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் கரூரில் நடந்த விவகாரத்தில் விஜய் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, அதே சமயம் அந்த விவகாரத்தில் தான் விஜய் பக்கமே இருப்பதாகத் தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.
மேலும், இந்த 2026 தேர்தலுக்குப் பிறகுதான் தமிழக அரசியலின் முழுப் பரிமாணத்தையும் விஜய் புரிந்துகொள்வார் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, 2026 தேர்தல் தமிழக பாஜகவிற்கு ஒரு மிக முக்கியமான தேர்தல் என்றும், இந்த முறை நல்ல எண்ணிக்கையில் இடங்களைப் பிடித்து திமுக ஆட்சியை வீழ்த்துவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதாகவும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி சரிந்து நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தலுக்காகவே தற்போது பெண்களுக்குத் தொகை வழங்குவதை ‘ஏமாற்று மாடல்’ என்று விமர்சித்த அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக உள்ளடக்கிய என்.டி.ஏ கூட்டணி பலமாக இருக்கும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
