மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர், தனது சக ஊழியர் மற்றும் உயர் அதிகாரிகள் மீது அளித்துள்ள புகார் ஐடி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின்படி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும்போது அறிமுகமான நபர், டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பழகியுள்ளார்.

தனக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டியுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ரிசார்ட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணைப் பலாத்காரம் செய்ததாகவும், அதன் பிறகு அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அந்த நபர் மற்றும் அவரது நண்பர்கள் இந்து தெய்வங்களை அவதூறாகப் பேசியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நிதா கான் என்ற பெண் அதிகாரி, தான் இரண்டு மாத கர்ப்பிணி எனக் கூறி முன்ஜாமீன் கோரியுள்ளார். ஆனால், டிசிஎஸ் நிறுவனம் அவர் மனிதவள மேம்பாட்டு அதிகாரி இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

தற்போது தலைமறைவாக உள்ள நிதா கானைத் தேடி மும்பை காவல்துறையினர் மும்ப்ரா பகுதியில் முகாமிட்டுள்ளனர். ஐடி நிறுவனத்தில் அரங்கேறிய இந்தச் சம்பவம் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.