சேலம் மாவட்டம் கஸ்தூரிப்பட்டி பகுதியில் குடும்பப் பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்துப் புதைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்த தவசியப்பன் என்பவரது மனைவி கனகவல்லி, அதே பகுதியில் உள்ள தறி பட்டறையில் பணிபுரிந்த செந்தில் என்பவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகாத உறவு கனகவள்ளியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்தபோது, இது தொடர்பாக வீட்டில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கனகவள்ளியைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர்.
இதன்படி கனகவள்ளியை அவரது மகன் கார்த்திக் உள்ளிட்டோர் சேர்ந்து கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்தனர். பின்னர் எவ்வித தடயமும் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில், அவரது உடலைத் தீயிட்டு எரித்து குழி தோண்டிப் புதைத்துள்ளனர்.
இது குறித்துத் தகவல் அறிந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலைக் குற்றம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கனகவள்ளியின் கணவர் தவசியப்பன், மகன் கார்த்திக் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
