இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி வசூலை அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி வரி வசூல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் வருவாய் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய் அதிகரித்து வரும் நிலையில் மார்ச் மாதத்திற்கான வருவாய் குறித்த விபரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1.60 லட்சம் கோடியாக இருக்கிறது.

தொடர்ந்து 12 மாதங்களாக மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய்‌ 1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை தொடங்கப் பட்டதிலிருந்து தற்போது 2-வது முறையாக ஜிஎஸ்டி வரி வருவாய் 1.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 2022-23 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரி வசூல் மொத்த வருவாய் 18.10 லட்சம் கோடியாக இருக்கிறது. மேலும் தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் 8,023 கோடியாக இருந்த நிலையில் நடப்பு மார்ச் மாதத்தில் வரிவசூல் 9,245 கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.