இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தும் அடிப்படையில் புதியதாக 27,000 அங்கன்வாடி மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசானது முடிவுசெய்துள்ளது. அதோடு 40,000 அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது.

அதில், நடப்பு ஆண்டில் மட்டும் 27,000 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படும். அதில் சுமார் 20,000 அங்கன்வாடி மையங்களானது 100 நாள் வேலை திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் கட்டி தரப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒவ்வொரு அங்கன்வாடி மையமும் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் ரூபாய்.8 லட்சம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மீதம் உள்ள ரூ.4 லட்சத்தை மத்திய-மாநில அரசுகள் சமமாக வழங்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி எதையும் எதிர்பார்க்காமல் நிதி வழங்குபவர்களிடம் நிதியுதவி பெற்று, இந்த நிதி தொகையை அங்கன்வாடிகளில் கழிப்பறை வசதி, மழைநீர் சேகரிப்பு தொட்டி வசதி, சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையலறைக்கு தேவையான பொருட்கள் வாங்குதல் ஆகியவற்றிற்காக செலவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.