இந்தியாவில் 24 மாநிலங்கள் மற்றும் 8 பெரு நகரங்களில் 66.9 கோடி மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடிய நபரை தற்போது தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சைபராபாத் பகுதியைச் சேர்ந்த வினய் பத்வாஜ் என்ற நபரை தற்போது போலீசார் கைது செய்துள்ள நிலையில் 66.9 கோடி மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடியது தெரியவந்துள்ளது.

இந்த நபர் பைஜூஸ், வேதாந்து அமைப்புகளின் மாணவர்களின் தரவுகளை திருடி விற்பனை செய்துள்ளார். இதேபோன்று 8 மெட்ரோ நகரங்களைச் சேர்ந்த 1.84 லட்சம் பயனர்களின் தரவுகள், குஜராத் மாநிலம் உட்பட 6 நகரங்களில் 4.5 லட்சம் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் தரவுகள், ஜிஎஸ்டி, ஆர்டிஓ, அமேசான், netflix, youtube, இன்ஸ்டாகிராம், பேடிஎம், போன் பே, பிக்பாஸ்கெட், புக் மை ஷோ, இன்ஸ்டாகிராம், சோமேட்டோ, பாலிசி பஜார், Upstox போன்ற முக்கிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தரவுகள் போன்றவற்றை வைத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் வைத்திருக்கும் தரவுகளில் பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள், அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள், மாணவர்களின் தரவுகளும் அடங்கும். இது தவிர டெல்லி மின்சார நுகர்வோர்கள், நீட் மாணவர்களின் தரவுகள், பான் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள், காப்பீடு வைத்திருப்பவர்கள், தனிப்பட்ட நபர்களின் மொபைல் நம்பர்கள் போன்றவைகளையும் வைத்துள்ளார்.

இந்த நபர் ஹரியானாவில் உள்ள பரிதாபத்தில் InspireWebz என்ற இணையதளத்தின் மூலம் செயல்பட்டு வாடிக்கையாளர்களுக்கு கிளவுட் டிரைவ் இணைப்புகள் மூலம் தரவுகளை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் செல்போன்கள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதற்காக சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என சைபராபாத் காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்.