தர்மபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது கற்பித்தல் பணிக்குச் செல்லாமல் நீண்ட நாட்கள் விடுப்பில் இருப்பது, பள்ளிக்கு வந்தது போல் கணக்கு காண்பித்து விட்டு வராமல் இருப்பது போன்ற குற்றச்சாட்டுக்கு காரணமான ஆசிரியர்களை கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.

அதன்படி அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர் பள்ளிக்கே வராமல் வேறு ஒரு நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அரசு ஆசிரியர் பாலாஜியை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் பல அரசு பள்ளிகளில் இது போன்ற நிலைதான் நீடித்து வருகிறது எனவும், கல்வித்துறை சார்பில் ஆய்வு கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டக்கூடாது எனவும், கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.