கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் அஞ்செட்டி சாலை வன சோதனை சாவடி அருகே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அமர்ந்திருந்தார். அந்த முதியவரை கவனிப்பதற்கு ஆள் இல்லை. இதனால் அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று அந்த பகுதியில் சுற்றி திரிந்தார். யாரும் அந்த முதியவரை கண்டு கொள்ளவில்லை. நேற்று கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் குமார் அப்பகுதியில் இருப்பவர்களிடம் முதியவரின் நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார்.

இதனையடுத்து ராஜேஷ் குமார் மருத்துவ குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியோடு அந்த முதியவரை மீட்டு அவருக்கு முடிவெட்டி, முக சவரம் செய்து, குளிப்பாட்டி, புதிய ஆடைகள் அணிவித்து அப்பகுதியில் இருக்கும் காப்பகத்திற்கு முதியவரை அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து முதியவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து உணவு வழங்கியுள்ளனர். கவனிப்பதற்கு ஆள் இல்லாமல் தவித்த முதியவரை காப்பகத்தில் சேர்த்த டாக்டர் ராஜேஷ்குமார் மற்றும் அவரது குழுவினரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.