திருச்சி மாவட்டத்தில் உள்ள வைரிசெட்டிபாளையம் உப்பிலியர் தெரு வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வெள்ளையன் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது தான் வளர்த்த 8 ஆடுகள் தெரு நாய்கள் கடித்து குதறியதால் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, தெருநாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதை தடுக்க இனியாவது தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.