திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி இரவு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் பொன் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் மகன் பசுபதி, வெள்ளைச்சாமி மகன் மனோகரன் ஆகியோர் சூர்யாவைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையின் விசாரணையில், கொலை நடந்த அன்று சூர்யா, பசுபதி, மனோகரன் ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சூர்யா, பசுபதியின் 21 வயது தங்கையைக் குறித்துத் தவறாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். மேலும், அவர் அலைபேசி எண்ணைக் கேட்டதோடு, “நீ ஊருக்குச் சென்றவுடன் உன் வீட்டுக்குள் நுழைந்து உன் தங்கையிடம் தவறாக நடந்துகொள்வேன்” என்று மிரட்டியுள்ளார்.
அத்துடன், “உன் தங்கையின் அலைபேசி எண்ணைத் தா, இல்லையென்றால் நீ காதலிக்கும் பெண்ணை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன்” என்றும் பசுபதியை மிரட்டியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற பசுபதி, சூர்யாவைத் தனது சகோதரி முறை எனக் கண்டித்தும் அவர் கேட்காததால், அருகில் கிடந்த கல்லை எடுத்து சூர்யாவின் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு, மனோகரனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. கைதான இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
