பீகார் மாநிலம் சாரண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ரிதேஷ் குமார் பண்டிட் என்ற அந்த இளைஞர், தான் உத்திரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் நகராட்சி ஆணையராகப் பணியாற்றும் 2022-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி என்று பொய் கூறி மாவட்ட ஆட்சியர் வைபவ் ஸ்ரீவஸ்தவாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
சுமார் 20 நிமிடங்கள் அவரிடம் உரையாடிய ஆட்சியர், அந்த இளைஞரின் பேச்சு மற்றும் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரது அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதை அடுத்து, தீவிர விசாரணையில் அவர் போலி அதிகாரி என்பது அம்பலமானது.
விசாரணையில், அந்த வாலிபர் டெல்லி முகர்ஜி நகரில் தங்கி குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதும், அரசு அலுவலகங்களில் அதிகாரத்தைக் காட்டி பொதுமக்களிடம் பணம் பறிப்பதற்காக இவ்வாறு போலி வேடமிட்டதும் தெரியவந்தது. மாவட்ட ஆட்சியரைச் சந்திப்பதற்கு முன்பாக அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போன்று முன்னாள் ஆட்சியரை அவர் சந்தித்து ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சாப்ரா நகர காவல்துறையினர் அந்த இளைஞர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அரசுப் பணிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி யாரிடமாவது அவர் பணம் பறித்துள்ளாரா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
