சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் வீடியோ ஒன்று, பிச்சைக்காரர்கள் குறித்த பொதுவான கண்ணோட்டத்தையே மாற்றும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் படுத்திருக்கும் நபர் ஒருவர் ஸ்விக்கி செயலி மூலம் தனக்குத் தேவையான உணவை ஆர்டர் செய்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Fardeen Khan (@fardeenonduty_)

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உணவு விநியோக ஊழியர், அவரிடம் உறுதி செய்ய முற்பட்டபோது, நான் சாலையில்தான் படுத்திருக்கிறேன் என அந்த நபர் சாதாரணமாகக் பதிலளித்துள்ளார். மேலும், அந்த உணவுப் பொட்டலத்தைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், கடும் குளிரிலும் பணிபுரிவதைக் பாராட்டி அந்த ஊழியருக்கு 50 ரூபாய் கூடுதல் தொகையை வெகுமதியாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வரும் நிலையில், அந்த நபரின் பெருந்தன்மையை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மனதளவில் அவர் பெரும் கோடீஸ்வரர் எனப் புகழும் அதே வேளையில், சிலர் இது விளம்பரத்திற்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளனர்.

தொழில்நுட்பம் எளிய மக்களிடமும் எந்த அளவிற்குச் சென்றடைந்துள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.