சமூக வலைத்தளங்களில், உயரம் குறைவாக உள்ள ஒரு இளம் பெண் உயரமான மற்றும் கனமான பைக்கை மிகச் சாமர்த்தியமாக ஓட்டும் வீடியோ ஒன்று வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பெண்களின் ஓட்டுநர் திறனைக் கேலி செய்யும் கருத்துகள் நிலவும் நிலையில், இந்த வீடியோ வித்தியாசமாகப் பேசப்பட்டு வருகிறது. காரணம், அந்தப் பெண் பைக்கைத் தனக்கேற்றவாறு ஓட்டுவதற்காகச் செய்துள்ள புத்திசாலித்தனமான ஏற்பாடு ஆகும்.

அந்தப் பெண் ஓட்டும் பைக்கின் பின் சக்கரத்தின் அருகில், இரண்டு சிறிய ஆதரவுச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவர் பைக்கை ஓட்டும்போது இந்தச் சக்கரங்கள் மேலே தூக்கப்பட்டு, பைக் சாதாரணமாக ஓடுகிறது.

ஆனால், அவர் நிறுத்தும்போது அல்லது பிரேக் போடும்போது, இந்தச் சிறிய சக்கரங்கள் தானாகக் கீழே இறங்கி, விமானம் தரையிறங்குவது போல, பைக்கின் சமநிலையைத் தக்கவைக்கின்றன.

மீண்டும் பைக்கை அவர் இயக்கத் தொடங்கும் போது, இந்தச் சக்கரங்கள் தானாகவே மேலே சென்றுவிடுகின்றன. அந்தப் பெண் கனமான பைக்கைத் தனக்குச் சாதகமாக மாற்றிய இந்த ‘ஸ்மார்ட் டெக்னிக்கைப்’ பார்த்த நெட்டிசன்கள், அவரை ‘ஜீனியஸ்’ என்று பாராட்டி வருகின்றனர்.