குமரி மாவட்டம் குழித்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயது லாரி டிரைவர், தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் சென்னித்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தபோது, பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சம்பவத்தன்று இரவு கணவர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர், தனது கள்ளக்காதலி வீட்டிற்குச் சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். எதிர்பாராத விதமாக வேலை முடிந்து சீக்கிரம் வந்த கணவர், தனது மனைவி வேறொரு வாலிபருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

ஆத்திரமடைந்தாலும் நிதானத்தை இழக்காத அவர், அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணி அறைக் கதவை வெளியில் இருந்து பூட்டி ‘திருடன்.. திருடன்..’ எனச் சத்தமிட்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் அந்த வாலிபருக்குத் தர்ம அடி கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் வாலிபரை மீட்டு விசாரணை நடத்தியபோது, தான் திருடன் அல்ல என்றும் அந்தப் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தடம் மாறிச் சென்ற மனைவியுடன் இனி வாழப்போவதில்லை என லாரி டிரைவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.