நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சிக்கல்கள், அவரது முந்தைய படங்களுக்கு ஏற்பட்ட பல போராட்டங்களையும் சட்டச் சிக்கல்களையும் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளன.

2003-ஆம் ஆண்டு வெளியான ‘புதிய கீதை’ திரைப்படத்தில் தொடங்கி, இன்று வரை அவரது படங்கள் ஏதேனும் ஒரு வகையில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகின்றன. தொடக்க காலத்தில் மத அமைப்புகளின் எதிர்ப்பால் ‘கீதை’ என்ற தலைப்பு மாற்றப்பட்ட நிலையில், விஜய்யின் 50-வது படமான ‘சுறா’ அடைந்த தோல்வியால் ஏற்பட்ட நஷ்டஈடு தொடர்பான பிரச்சனைகள் அவரது அடுத்த படமான ‘காவலன்’ வெளியீட்டில் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தன.

பின்னர் பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே அந்தப் படம் திரைக்கு வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் விஜய்யின் படங்கள் பெரும் வெற்றிகளைப் பெற்றாலும், அரசியல் மற்றும் சமூக ரீதியாகப் பல சவால்களை எதிர்கொண்டன. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ ஆகிய படங்கள் தலைப்புப் பிரச்சனை மற்றும் தயாரிப்பு நிறுவனப் பின்னணி காரணமாகப் பல அமைப்புகளின் எதிர்ப்பைச் சந்தித்தன.

குறிப்பாக, ‘தலைவா’ படத்தின் போது அரசுக்கும் விஜய்க்கும் இடையே ஏற்பட்ட உரசல் மற்றும் ‘டைம் டு லீட்’ என்ற வாசகம் நீக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, ‘புலி’ படத்தின் வெளியீட்டிற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் பல திரையரங்குகளில் முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ போன்ற படங்கள் அரசியல் ரீதியாகப் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற வரி தொடர்பான வசனங்களுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, விஜய்யின் மத அடையாளத்தைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர். ‘சர்கார்’ திரைப்படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்த காட்சிகளுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இது தவிர, நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் சில வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டது மற்றும் ‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட தடியடி போன்ற சம்பவங்களும் விஜய் எதிர்கொண்ட சோதனைகளின் பட்டியலை நீட்டிக்கின்றன.

இத்தனை தடைகளையும் கடந்து விஜய் தனது ஒவ்வொரு படத்தையும் மக்கள் மத்தியில் வெற்றிபெறச் செய்து வருகிறார். ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது நெய்வேலியில் நடந்த விசாரணை மற்றும் அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட புகைப்படம் போன்றவை ரசிகர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தின.

தற்போது ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள தணிக்கைச் சிக்கல் மற்றும் அரசியல் ரீதியான மோதல்கள், விஜய்யின் திரைப்பயணத்தில் சர்ச்சைகள் என்பவை பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதையே காட்டுகின்றன. இருப்பினும், இத்தகைய தடைகளே அவரது படங்களுக்குக் கூடுதல் விளம்பரமாகவும், எதிர்பார்ப்பாகவும் மாறிவிடுவது குறிப்பிடத்தக்கது.