கேரளா பாலக்காடு மாவட்டம் குத்தன்னூர் பகுதியைச் சேர்ந்த அகில் (25) என்ற இளைஞருக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அகில், சிறுமியை காதலிப்பதாகக் கூறிய நிலையில், அவர் அதை ஏற்க மறுத்து பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் கோபமடைந்த அகில், தனது நண்பர் ராகுல் (24) உடன் சேர்ந்து சிறுமியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று, படுக்கை அறை ஜன்னல் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்தார். பின்னர், யூடியூப் பார்த்து தயாரித்த பெட்ரோல் குண்டை வீசினர். ஆனால், மழை காரணமாக குண்டு நனைந்து வெடிக்காமல் போனதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குழல்மண்ணம் காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அகில் மற்றும் ராகுல் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தினர்.

விசாரணையில், காதல் மறுப்பால் ஆத்திரமடைந்து பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.