ஜவுளித் துறையின் நீண்டநாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பால் இந்திய ஜவுளித் துறைக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் விதமாக, ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை 42 நாட்களுக்கு இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட துறைகளுக்கு நிவாரணம் கிடைக்கப் போவதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் அறிவிப்பின் படி, பருத்தி மீதான அடிப்படை சுங்க வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி (AIDC) ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மூலம் உள்நாட்டு பருத்தி விலைகள் சர்வதேச விலைகளுடன் ஒத்துப்போகும் என்றும், தொழில்துறை போட்டித்தன்மை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“நீண்டகாலமாக கோரிக்கை விடுத்த நிவாரணம் கிடைத்துள்ளதால், அதிகாரிகள் எடுத்த முடிவை பெரிதும் வரவேற்கிறோம்” என்று இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு (CITI) செயலாளர் சந்திரிமா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.