ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராகச் செயல்பட்ட முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது, இந்திய இளம் வீரர்களின் நடத்தை குறித்துக் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
போட்டி முடிந்த பிறகு வழக்கமாக இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளும் நடைமுறையை இந்திய வீரர்கள் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, இந்திய சீனியர் அணி ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுக்கும் கொள்கையைத் தொடங்கியது. அதையே தற்போது யு-19 மற்றும் மகளிர் அணிகளும் பின்பற்றி வருகின்றன.
இது குறித்துப் பேசிய சர்பராஸ் அகமது, “நாங்கள் இதற்கு முன்பு கிரிக்கெட்டை மதிக்கும் இந்திய அணிகளுடன் விளையாடியுள்ளோம். ஆனால் இந்த இளம் வீரர்களின் நடத்தை விளையாட்டுக்கு அவமரியாதை அளிப்பதாக உள்ளது” என்று குற்றம் சாட்டினார். இந்திய அணி வீரர்கள் ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்ட போதிலும், தனது அணி வீரர்களை விளையாட்டுத் தன்மையுடன் வெற்றியைத் தரம் தாழ்ந்து கொண்டாட வேண்டாம் என்று தான் அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சமீர் மின்ஹாஸ் 172 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். பாகிஸ்தான் நிர்ணயித்த 348 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 156 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வியைச் சந்தித்தது. இந்த வெற்றிக்குப் பிறகு, 2026 டி20 உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக சர்பராஸை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
