ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற போண்டி  பீச் பகுதியில் யூத சமூகத்தினர் நடத்திய ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது, நவீத் அக்ரம் மற்றும் அவரது தந்தை சாஜித் அக்ரம் ஆகியோரால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

15 உயிர்களைப் பலிவாங்கிய இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் வம்சாவளி கிரிக்கெட் நட்சத்திரமான உஸ்மான் கவாஜாவின் குடும்பத்தினர் கடும் சமூக வலைதளத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாகக் கவாஜாவின் இளம் மகள்கள் இணையதளங்கள் வாயிலாக மிக மோசமான முறையில் வசைபாடப்பட்டதாகவும், “நிலைமை முன்னெப்போதையும் விட தற்போது மோசமடைந்துள்ளதாகவும்” அவரது மனைவி ரேச்சல் கவாஜா வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இத்தாக்குதலைக் கண்டித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருந்த கவாஜா, தற்போது தன் குடும்பத்தின் பாதுகாப்பிற்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மற்றொரு புறம், இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் உஸ்மான் கவாஜா முதலில் அணியிலிருந்து நீக்கப்பட்டது அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியது. அவருக்குப் பதில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஜேக் வெதரால்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறக்கப்பட்ட நிலையில், ஸ்டீவ் ஸ்மித் திடீரென உடல்நலக்குறைவால் விலகியதால் கவாஜாவுக்கு கடைசி நிமிடத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

39 வயதாகும் கவாஜா இந்த இக்கட்டான சூழலில் 82 ரன்கள் குவித்துத் தனது திறமையை நிரூபித்தாலும், குடும்பத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் அணியில் நீடிக்கும் நிச்சயமற்ற தன்மை என அவர் தற்போது இரட்டைச் சவால்களைச் சந்தித்து வருகிறார். இருப்பினும், கவாஜாவின் ஓய்வு குறித்து அணி நிர்வாகம் இப்போதே எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெளிவுபடுத்தியுள்ளார்.