துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, தொடக்க வீரர் சமீர் மின்ஹாஸின் அதிரடி ஆட்டத்தால் (172 ரன்கள்) 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி, பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
வைபவ் சூர்யவன்ஷி ஓரளவிற்கு போராடிய போதிலும், இந்திய அணி 156 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆசியக் கோப்பை மகுடத்தை சூடி வரலாற்று சாதனை படைத்தது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் இளம் வீரர்கள் களத்தில் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Why is Pakistan’s team dancing to an Indian movie song ‘Dhurandhar’ after winning the U19 Asia Cup?👀
So they even celebrate their victories to Indian songs?
Don’t they have their own songs? pic.twitter.com/PhSR48c74Y
— Mention Cricket (@MentionCricket) December 21, 2025
“>
ரன்வீர் சிங் மற்றும் அக்ஷய் கன்னா நடிப்பில் வெளியாகி இந்தியாவில் வசூல் சாதனை படைத்து வரும் ‘துரந்தர்’ திரைப்படத்தின் “பாஸ்லா” பாடலுக்கு அந்த நாட்டு வீரர்கள் உற்சாகமாக நடனமாடினர்.
பாகிஸ்தானை தவறாக சித்தரிப்பதாகக் கூறி அந்நாட்டு அரசு இத்திரைப்படத்திற்கு தடை விதித்துள்ள போதிலும், அதன் பாடல்கள் எல்லைகளைக் கடந்து அந்நாட்டு வீரர்களையே ஆட்டம் போட வைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைன் ராப்பர் ஃபிலிப்பராச்சி மற்றும் டிஜே அவுட்லா உருவாக்கிய இந்தப் பாடலின் ‘பலூச்’ பாணி நடன அசைவுகள் தற்போது உலகளவில் ட்ரெண்டாகி வருகின்றன.
