நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வருகிறது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அந்த யானைகளை கண்காணித்து வந்தனர். நேற்று குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கே.என்.ஆர் என்ற பகுதியில் யானைகள் குட்டியுடன் சாலையை கடக்க முயற்சித்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை சிறிது தூரம் நிறுத்தி வைத்தனர்.

ஒரு மணி நேரத்திற்கு பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, மலைப்பாதையில் யானைகள் உலா வருகிறது. அதனை கண்காணிப்பதற்காக ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் யானைகளுக்கு தொந்தரவு அளிக்கக்கூடாது. அதனை மீறி தொந்தரவு அளிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.