இளம் தலைமுறையினரை புகையிலை பழக்கத்திலிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்கில், இங்கிலாந்து அரசு ஒரு புரட்சிகரமான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. “புகையிலை மற்றும் வேப்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பச்சைக்கொடி காட்டியுள்ளன.
இதன்படி, 2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த எவரும் தங்களது வாழ்நாள் முழுவதும் சட்டப்பூர்வமாகச் சிகரெட் வாங்க முடியாது. அதாவது, தற்போது 17 வயது மற்றும் அதற்குக் குறைவான நிலையில் உள்ளவர்கள், இனி ஒருபோதும் புகையிலைப் பொருட்களை வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை ஒரு வருடம் அதிகரிப்பதன் மூலம், எதிர்காலத் தலைமுறையினருக்குச் சிகரெட் விற்பனை செய்வதை நிரந்தரமாக நிறுத்த பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.
இன்றைய இளைஞர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தைத் தொடங்காமல் தடுப்பதே இந்த வரலாற்றுச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் இங்கிலாந்து உலகின் முதல் ‘புகையிலையற்ற நாடாக’ மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
