பெங்களூரு நகரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், வக்கீலாக பணியாற்றி வருகிறார். அவருக்கும், மங்களூருவில் நக்சல் ஒழிப்பு பிரிவில் காவலராக பணியாற்றும் சித்தேகவுடா (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு நட்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த நட்பு காதலாக மாறியது. அதன்பின் சித்தேகவுடா தொடர்ந்து பெங்களூருவுக்கு வருவதுடன், திருமணத்துக்கான ஆசை வார்த்தைகளையும் கூறி, தனியார் விடுதிகளில் பலமுறை உடலுறவில் ஈடுபட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இளம்பெணை திருமணம் செய்ய சித்தேகவுடா மறுத்ததாகவும், அதற்கான காரணமாக அவரது சாதியை முன்னிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. திருமணத்தைக் கேட்டு வற்புறுத்திய போதும், பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பெங்களூரு பசவேசுவரநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புகாருக்குப் பிறகு பணிக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்த சித்தேகவுடாவை போலீசார் வலைவீசி கைது செய்தனர். விசாரணையில் திருமண ஆசை காட்டி கற்பழித்ததும், பிறகு சாதியைக் காரணம் காட்டி திரும்பியதும் உறுதியாகியுள்ளது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெங்களூரு – மங்களூரு போலீஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
