அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிராக பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெளியிட்டதாக கூறப்படும் அவதூறு பதிவுகள் தொடர்பாக, டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

paranjoy.in, adaniwatch.org, adanifiles.com.au உள்ளிட்ட தளங்களில் வெளிவந்த கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அனுஜ் குமார் சிங், “தொடர்ந்து அவதூறு பரப்பப்படுவது நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கருத்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட விசாரணை வரை, ஆதாரமற்ற மற்றும் அவதூறான பதிவுகளை வெளியிடவோ, பரப்பவோ கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், கட்டுரைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளில் உள்ள தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை ஐந்து நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு நீக்கப்படவில்லை என்றால், கூகுள், யூடியூப், எக்ஸ் போன்ற இணைய தளங்கள் மூலம் 36 மணி நேரத்திற்குள் உள்ளடக்கம் அகற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.