
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்ட நிலையில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வராகவோ ஓ. பன்னீர்செல்வம் இருந்தனர். பின்னர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி அவர்களை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தார். இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் மட்டுமே கருத்து கேட்கப்பட்டது எனவும் எதிர்மனுதாரரான ஓ பன்னீர்செல்வத்திடம் கருத்து கேட்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இருவரிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தற்போது ஓ பன்னீர்செல்வம், சூரியமூர்த்தி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய மூவருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இவர்கள் மூவரும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிசம்பர் 19ஆம் தேதிக்குள் எழுத்துப் பூர்வ பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.