கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் சர்மிளா (24) என்ற பெண் தனியார் பேருந்து இயக்கி வருகிறார். இவர்தான் கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுனராக இருக்கிறார். இதுகுறித்து சர்மிளா கூறியதாவது, எனது தந்தை மகேஷ் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். எனது தாய் ஹேமா. சிறுவயதில் இருந்து எனக்கு எனது தந்தை தான் ரோல் மாடல். இதனால் எனது தந்தையின் ஆட்டோவை ஒட்டி அவருக்கு உறுதுணையாக இருந்தேன். படிப்படியாக கார் ஓட்ட கற்றுக்கொண்டு சிலிண்டர் கொண்டு செல்லும் வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்தேன். அப்போதுதான் பெரிய கனரக வாகனங்களை இயக்க வேண்டும் என ஆசை வந்தது.

எனக்கு எனது தந்தை உறுதுணையாக இருந்தார். இதனையடுத்து கனரக வாகனங்களை இயக்கி வேலைக்காக காத்து கொண்டிருந்தேன். அப்போது தான் மகளிர் தினம் அன்று நான் வேலைக்காக காத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி சோமனூர்- காந்திபுரம் வழித்தடத்தில் தனியார் பேருந்து டிரைவராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. எனது பணியை சிறப்பாகவும், உற்சாகமாகவும் செய்து வருகிறேன் எனக்கு மற்ற பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள், பயணிகள் என அனைவரும் வாழ்த்து தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறினார்.