நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தி சிலை சந்திப்பு பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. நேற்று அதன் அருகே வங்கி முன்பு இருக்கும் மூடப்பட்ட கழிவுநீர் கால்வாயில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதற்கிடையே பெட்ரோல் நிலைய சேமிப்பு கலனில் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரசாயன நுரையை கால்வாயில் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து 5 லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி சென்ற ஒருவர் தவறுதலாக கீழே கொட்டி விட்டார். அப்போது பெட்ரோல் நிலைய நிர்வாகத்தினர் தரையில் கொட்டிய பெட்ரோல் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். அந்த தண்ணீர் தாழ்வாக சென்று கால்வாய்க்குள் சென்றது. அப்போது யாரோ சிகரெட் பிடித்து விட்டு நெருப்புடன் அதை தெரியாமல் கால்வாயில் வீசியதால் தீ விபத்து நடந்தது தெரியவந்தது.