திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளியை சேர்ந்த சபரிநாத்(42) என்பவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராஜராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீராம்வர்சத்(15) என்ற மகன் இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக ராஜராஜேஸ்வரி இறந்து விட்டதால் சிறுவன் உடுமலையில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறார்.
இந்நிலையில் சபரிநாத்துக்கு சொந்தமான வீடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் இருக்கிறது. இவரது வீட்டின் தரைத்தளத்தில் கணவரை பிரிந்து வாழும் சாந்தி(37) என்பவர் தனது மகன் அஸ்வினுடன் வாடகைக்கு குடியிருந்தார். கடந்த 7-ஆம் தேதி விடுப்பு எடுத்து கோவையில் இருக்கும் வீட்டிற்கு வந்து சபரிநாத் தங்கியுள்ளார். நேற்று காலை வீட்டிலிருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சமையலறையில் உடலில் தீ பற்றி எரிந்த நிலையில் சபரிநாத்தும், சாந்தியும் காப்பாற்றுங்கள் என அலறி சத்தம் போட்டனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சமையல் அறையில் பற்றி அறிந்த தீயை அணைத்தனர். இதனையடுத்து மின் கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.