கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணனூர் பகுதியில் ஞானதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேர்கிளம்பி பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய நகை கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு ஞானதாஸ் கடன் தொகையை முறையாக செலுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட வட்டிக்கு மேல் ரூ.13,452 அதிகமாக வட்டி வசூலித்ததாக தெரிகிறது. இதுகுறித்து வங்கியில் புகார் அளித்தும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டி பணத்தை அவர்கள் திரும்ப தரவில்லை.

இதுகுறித்து ஞானதாஸ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 15 ஆயிரம் ரூபாய் அபராதம், கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டி பணம் 13,452 ரூபாய், வழக்க செலவு பணம் 5 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவை பிறப்பித்தனர்.