கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அர்ச்சனைக்கு 5 ரூபாய், பால் அபிஷேகத்திற்கு 500 ரூபாய், சிறப்பு பூஜைக்கு 1500 ரூபாய், பால் பாயாசம் ஒரு லிட்டர் 150 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் அபிஷேக சீட்டுகளை ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி கோவில் ஊழியர்கள் பக்தர்கள் வாங்கும் சீட்டுகளை எந்திரம் மூலம் ஸ்கேன் செய்து விட்டு கோவிலுக்குள் அனுப்புவதால் அந்த சீட்டை மீண்டும் பயன்படுத்த இயலாது.

இதே போல அர்ச்சனை மற்றும் அபிஷேக சீட்டுகளை ஸ்கேன் செய்யும் வசதி நாகராஜா கோவிலிலும் ஏற்படுத்தப்பட்டு 3 ஸ்கேன் எந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் ஊழியர்கள் செல்போனிலேயே சீட்டை ஸ்கேன் செய்ய வசதியாக செல்போன் செயலியும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் இருக்கும் மிக முக்கியமான 54 கோவில்களில் அர்ச்சனை மற்றும் அபிஷேக சீட்டுகளை ஸ்கேன் மூலமாக பரிசோதனை செய்யும் முறை துவங்கப்பட்டுள்ளது.