சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி, தனது நூற்றாண்டு விழாவை விமர்சையாக கொண்டாடியது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். விழாவில் எம்.பி. தயாநிதி மாறன், அமைச்சர் அன்பில் மகேஷ், எம்எல்ஏக்கள் எழிலன், இனிகோ இருதயராஜன், சென்னை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், “குட் ஷெப்பர்ட் பள்ளி என்பது சென்னையின் ஒரு முக்கிய அடையாளம். நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பலர் உருவாகியுள்ளனர். இப்பள்ளி நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், திறமையான கலைஞர்கள், பண்பாடு மேம்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளது. பாடப்புத்தகங்களைத் தாண்டி மனிதநேயத்தை கற்றுத்தரும் கல்வியே இங்கே வழங்கப்படுகிறது,” என தெரிவித்தார்.
இந்தியாவின் பல மாநிலங்களில் வெறுப்புணர்வை தூண்டுவது போல செயல்படுகிறது மத்திய அரசு. மாணவர்கள் இன, மத வேறுபாடுகளைக் கடந்து ஒருமைப்பாட்டுடன் பழக வேண்டும் என்பதற்கான அரங்கமே பள்ளி எனக் குறிப்பிட்ட அவர், இன்று சிறுபான்மையினரின் மீது வெறுப்புணர்வு, பிளவுவாத அரசியல் அதிகரித்து வருவதை விமர்சித்த முதலமைச்சர், “இந்தியாவில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக, பள்ளி விழாக்களில் கூட அரசியல் பேச வேண்டிய நிலை வந்துள்ளது,” என்று வருத்தம் தெரிவித்தார்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தையும் தன் உரையில் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “ரீல்ஸ்ல பார்ப்பதெல்லாம் ரியாலிட்டி கிடையாது. இன்ஸ்டாவில் Role Model தேட வேண்டாம். Like-க்கு கெத்து கிடையாது. படிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள், விளையாட்டிலும் ஆர்வம் காட்டுங்கள். உடல்நலனையும் பராமரியுங்கள். பெற்றோர்களை Best Friend என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள்,” என மாணவர்களுக்கு நேர்த்தியான அறிவுரைகளையும் வழங்கினார்.
