தமிழ் சினிமாவில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமாகி, தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள ரவி மோகன், தற்போது தனது சினிமா பயணத்தை புதிய பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தனிப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
இந்த புதிய நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ரவி மோகன், தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் தான் ஹீரோவாக நடித்து, இயக்குநர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் உருவாகப்போவதாக அறிவித்தார். மேலும், தனது இரண்டாவது தயாரிப்பாக, யோகி பாபுவை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து, தானே இயக்குநராகவும் அறிமுகமாக இருப்பதாக தெரிவித்தார். இது ரவி மோகனின் புதிய முயற்சிக்கு திரையுலகத்தில் பெரும் வரவேற்பாக அமைந்துள்ளது.
இந்த சிறப்புவிழாவில் கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, ஜெனிலியா, சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பாக்கினார்கள். ரவி மோகனின் திரைப்பயணத்திற்கு ஆதரவும் வாழ்த்துக்களும் தெரிவித்த அவர்கள், அவரது திறமைகளை மேடையில் பகிர்ந்துகொண்டனர்.
விழாவில் உரையாற்றிய கார்த்தி, தனது நெருங்கிய நண்பர் ரவி மோகனை குறித்து உணர்வுப்பூர்வமாகப் பேசினார். “ரவியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், யாருக்கும் கெடுதல் நினைக்காத மனசு. அவனிடம் இருக்கும் பல திறமைகள் வெளிக்காட்டப்படாமலேயே இருக்கின்றன. ஒருமுறை ஒரு கதையை சொன்னப்போது அவன் எழுதும் திறமையையும், காட்சிப்படுத்தும் விதத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன். எடிட்டிங், உலக சினிமா பற்றிய அறிவும் அவனுக்கு நிறைய இருக்கிறது,” என புகழ்ந்தார்.
இரண்டு படங்களையும் தானே தயாரித்து, ஒரு படத்தில் ஹீரோவாகவும் மற்றொரு படத்தில் இயக்குநராகவும் செயல்பட உள்ள ரவி மோகனின் இந்த புதிய முயற்சி திரையுலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரசிகர்களும், சினிமா வட்டாரமும், அவரது வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
