அணு ஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களே தங்களது அடுத்த இலக்கு என ஈரானின் புரட்சிகரக் காவல் படை பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அந்நாட்டின் ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் அபுதாபி மற்றும் துபாய் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அமெரிக்கா பயன்படுத்துவதாகக் கருதும் ஈரான் அதற்குப் பழிவாங்கும் வகையில் உலகின் முன்னணி நிறுவனங்களை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.

மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் உள்ளிட்ட பதினெட்டு முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அங்குப் பணியாற்றும் ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறும் ஈரான் அறிவுறுத்தியுள்ளது. ஈரான் குறிப்பிட்டது போலத் தாக்குதல் நடத்தப்பட்டால் சர்வதேச அளவில் தொழில்நுட்பச் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆப்பிள் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கும் பட்சத்தில் அது உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அமெரிக்கா தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ள சூழலில் ஈரானின் இந்த அதிரடி அறிவிப்பு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.