அமெரிக்காவின் சீயேட்டில் நகரில் உள்ள நார்த்கேட் (Northgate) மெட்ரோ இரயில் நிலையத்தில் கடந்த மார்ச் 19-ம் தேதி இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. எலிசியோ மெலண்டஸ் (Elisio Melendez) என்ற 26 வயது இளைஞர், இரயில் நடைமேடைக்கு வந்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒருவரை பின்னாலிருந்து வந்து திடீரென இரயிலுக்கு முன்பாகத் தள்ளியுள்ளார். ஆனால், அந்த நபர் நிலைதடுமாறினாலும் லாவகமாகச் சமாளித்து இரயிலில் மோதாமல் தப்பினார்.

ஆனாலும் விடாத அந்த இளைஞர், மீண்டும் இரண்டாவது முறையாக அந்த நபரை இரயிலை நோக்கித் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த மொத்த சம்பவமும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கும், தாக்குதல் நடத்திய இளைஞருக்கும் இடையே எந்தப் பழக்கமோ அல்லது முன்விரோதமோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில், அருகில் இருந்த மனநலக் காப்பகம் ஒன்றில் இருந்த எலிசியோ மெலண்டஸைக் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 2019-ல் தனது சகோதரியைக் கத்தியால் குத்திய வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மீது இரண்டாம் நிலை கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சுமார் $750,000 பிணையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மார்ச் 31-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.