அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர் மற்றும் தற்போதைய பதற்றமான சூழல் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வாஷிங்டன் நேரப்படி புதன்கிழமை இரவு 9 மணிக்கு இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை இந்த முக்கிய உரையை அவர் நிகழ்த்துகிறார்.
மேலும் ஈரானுடனான இராணுவ நடவடிக்கைகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரக்கூடும் என்று டிரம்ப் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ள நிலையில், போர் நிறுத்தம் அல்லது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த மிக முக்கியமான அறிவிப்புகளை அவர் இந்த உரையில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஈரான் உடனான மோதல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதும், அமெரிக்காவில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதும் டிரம்பிற்கு அரசியல் ரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில், ஒரு உடன்பாடு எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்கப் படைகள் விரைவில் அங்கிருந்து வெளியேறும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஈரானின் அணுஆயுதத் திறன் முடக்கப்படுவதை உறுதி செய்த பின்னரே இந்த வெளியேற்றம் அமையும் எனத் தெரிகிறது. இந்த உரை உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் கப்பல் போக்குவரத்துத் தடைகள் மற்றும் சர்வதேசப் பொருளாதாரத் தாக்கம் குறித்து அவர் என்ன பேசப்போகிறார் என்பதை உலகமே உற்று நோக்குகிறது.
