இந்தியாவில் தற்போது தனிநபர் கடன் வாங்குவது மிகவும் எளிதாகிவிட்டதால், பலர் தங்களின் அவசரத் தேவைகளுக்கும் வாழ்க்கை முறைச் செலவுகளுக்கும் கடன் வாங்குகின்றனர். ஒருவேளை உங்களிடம் கையில் அதிகப் பணம் இருந்தால், அந்தத் தனிநபர் கடனை முன்கூட்டியே கட்டி முடிப்பது நல்லதா அல்லது கெட்டதா என்ற கேள்வி எழலாம்.

கடனை முன்கூட்டியே அடைப்பதன் மூலம் (Foreclosure) வட்டிச் செலவைக் குறைக்கவும், மாதாந்திரத் தவணை (EMI) சுமையிலிருந்து விடுபடவும் முடியும். வீட்டுக் கடனைப் போலத் தனிநபர் கடனுக்கு எந்த வரிச் சலுகையும் கிடைக்காது என்பதால், அதிக வட்டி கட்டும் கடனை அடைப்பது பொதுவாக நல்ல முடிவாகவே பார்க்கப்படுகிறது.

இருப்பினும், கடனை முன்கூட்டியே அடைப்பதற்கு பெரும்பாலான வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலிக்கின்றன. எனவே, வட்டிச் சேமிப்பை விட வங்கிகள் பிடிக்கும் இந்த முன்கூட்டியே அடைக்கும் கட்டணம் குறைவாக இருந்தால் மட்டுமே, கடனை முன்கூட்டியே செலுத்துவது உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.

மேலும், உங்களிடம் உள்ள முழுச் சேமிப்பையும் கொண்டு போய் கடனை அடைப்பதில் பயன்படுத்தக் கூடாது. குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தின் 6 மாத செலவுகளுக்கான ‘அவசரகால நிதியை’கையிருப்பில் வைத்த பிறகே மீதமுள்ள பணத்தைக் கடனை அடைக்கப் பயன்படுத்த வேண்டும் என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால், கையில் அவசரத் தேவைக்கான பணம் இருக்கிறதா, வட்டிச் சேமிப்பு முன்கூட்டியே அடைக்கும் கட்டணத்தை விட அதிகமாக உள்ளதா என்பதை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். முக்கியமாக, கடன் வாங்கும் முன்பே அதன் அவசியத்தைப் பலமுறை யோசித்துச் செயல்படுவது கடன் வலையில் சிக்குவதைத் தவிர்க்கும்.