தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்தில் விவசாயியான கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒரு பசு மாடை தாக்கியுள்ளது. இந்நிலையில் மாட்டின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த கோபு யானை நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் யானை மாட்டை கீழே தள்ளி காலால் மிதித்து கொன்று விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

இதனால் குடல் சரிந்து மாடு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக பயிர்களை நாசப்படுத்திய யானை அந்த பகுதிகளில் சுற்றி திரிந்து தற்போது பசுமாட்டை கொன்றது. எனவே யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.