கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் காந்தி நகரில் முகமது ஹனிபா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், அவரது மகன் கல்யாண குமார் ஆகியோர் எனது உறவினர் மூலம் அறிமுகமாகினர். அவர்கள் ஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் முதலீடு செய்தால் சில மாதத்தில் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தைகள் கூறினார்கள்.

இதனை நம்பி பல்வேறு தவணைகளாக அவர்களிடம் 85 லட்ச ரூபாயை கொடுத்தேன். இதனையடுத்து லாபத்தொகை எனக் கூறி அவர்கள் 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்தனர். மீதி உள்ள 76 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கதிர்வேலை உடனடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கல்யாண குமாரை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் கல்யாண் குமார் துபாயில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிந்தது. நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.