அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கீழமை நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் இது சற்றே எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது 4 மாத காலத்திற்கு செல்லுபடி ஆகும் என முடிவு செய்யப்பட்டிருந்ததால் தற்போது இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவி காலாவதி ஆகிவிட்டது.
இதனால் மீண்டும் பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொது செயலாளராக மாறிவிடலாம் என்று கணக்கு போட்டு வைத்துள்ளாராம். தற்போது அதிமுக கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடியின் வசம் இருப்பதால் எப்படியும் நிரந்தர பொதுச் செயலாளர் ஆகிவிடலாம் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக வருகிற 9-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார்.
இந்த கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளராக மாறுவது குறித்து ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதிக்குள் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் மாறிவிடுவார் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவாராம். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொது செயலாளர் மாறிய பிறகு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்னும் தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.