கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நினைவு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றில் வீரமிகு போராட்டமாக தோள்சீலை போராட்டம் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் அனைத்து வீதிகளிலும் பெண்கள் செல்ல முடியாது. வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். சேலை அணிய முயற்சி செய்த பெண்கள் தாக்கப்பட்டனர்.

இது அய்யா வைகுண்டரின் போராட்டத்திற்கு பிறகு தான் மாறியது. வைகுண்டர் மற்றும் கர்ணல் மன்றோ போன்றவர்களை மறக்க முடியாது. திராவிட மாடல் அரசு பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது. திமுக அரசு அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவதால் தான் சிலர் எதிர்க்கிறார்கள். அடுத்த வருடம் தமிழக அரசும் கேரள அரசும் இணைந்து வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தை கொண்டாட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறினார்.

மேலும் பட்டியலின பெண்கள் தங்கள் மார்பை மறைக்க சேலை அணிவதற்கு வரி செலுத்த வேண்டும் என பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பாகவே திருவிதாங்கூர் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் தன்னுடைய மார்பை அறுத்து எறிந்த முதல் பெண் போராட்டத்திற்கு அரைகூவல் விடுத்தார். இதைத்தொடர்ந்து தொடர்ந்து பெண்கள் தோள்சீலை அணிவதற்காக போராட்டம் நடத்தினர். இந்த தோள்சீலை போராட்டத்தில் அய்யா வைகுண்டர், கேரளாவின் நாராயண குரு மற்றும் சமய சீர்திருத்தவாதி என சார்லஸ் மீட் போன்றோர் கலந்து கொண்டு பெண்களின் உரிமைக்காக போராடினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.