தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் குறித்த சர்ச்சை பற்றி தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போன்று வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை அரசு பதிவு செய்து வைத்துக் கொண்டால் குற்ற செயல்களை தடுக்கலாம்.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் வட மாநிலத்திற்கு தப்பி ஓடிய நிலையில் ஒருவர் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மீதம் உள்ளவர்களை பிடிப்பது கடினமாக இருக்கிறது என போலீசாரே கூறுகிறார்கள். அதன் பிறகு ராமேஸ்வரத்தை சேர்ந்த பெண்ணை வட இந்தியர்கள் வன்கொடுமை செய்து கொலை செய்தார்கள். ஒரு உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்த வட இந்தியர்கள் ஓனரையே கொலை செய்து விட்டு பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இப்படி பல செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது. நாம் அவர்களை தாக்கவில்லை.

அவர்கள்தான் தமிழர்களை தாக்குகிறார்கள். தமிழர்கள் உழைக்க மாட்டார்கள் சோம்பேறிகள் என்று கூறுவது வருத்தத்தை கொடுக்கிறது. வட இந்தியர்கள் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பாக இங்கு எந்த வேலையும் நடக்கவில்லையா. வட இந்தியர்கள் மீது ஏன் இந்த திடீர் பாசம். தமிழகத்திற்கு இந்திக்காரர்களை அனுப்பி ஓட்டு வாங்கிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்று சொன்ன தமிழக முதல்வர் ஸ்டாலினே  தற்போது அவர்கள் மீது கை வைத்தால் எந்த கொம்பனாக இருந்தாலும் அவர்களை சும்மா விட மாட்டேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். நாங்கள் அர்த்தம் இல்லாமல் பேசவில்லை என்று கூறியுள்ளார்.