உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில், சட்டத்தை மதிக்காமல் ஒரு நபர் செய்த காரியம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்பக்க போனட் (Bonnet) மீது ஒரு சிறுவனை படுக்க வைத்துவிட்டு, அந்த நபர் காரை அதிவேகமாகச் சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த ஆபத்தான ஸ்டண்ட் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது காட்டுத்தீயாகப் பரவி நொய்டா போலீசாரின் கவனத்திற்குச் சென்றது.

சிறுவனின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த நபரை போலீசார் உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்தனர்.

மேலும், ஸ்டண்ட் செய்ய பயன்படுத்தப்பட்ட அந்த சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். “ரீல்ஸ் மோகத்தால் பிள்ளைகளின் உயிரோடு விளையாடாதீர்கள்” என போலீசார் இந்தச் சம்பவத்தின் வாயிலாகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.