ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 1 முதல் 50 வரையிலான எண்களை எழுதாததற்காக 4 வயது சிறுமியை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், செக்டார்-58 பகுதியில் வசிக்கும் கிருஷ்ணா ஜெய்ஸ்வால் (31) என்பவர் தனது மகளுக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்துள்ளார்.
அப்போது அந்தச் சிறுமியால் எண்களைச் சரியாக எழுத முடியாததால் ஆத்திரமடைந்த அவர், சமையலறை மத்துக்கட்டையால் சிறுமியை சரமாரியாகத் தாக்கியதுடன், தரையில் தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த வன்ஷிகா என்ற அந்தச் சிறுமி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தனது குற்றத்தை மறைக்க முயன்ற தந்தை, சிறுமி படிக்கட்டில் இருந்து விழுந்துவிட்டதாகத் தனது மனைவியிடம் பொய் கூறியுள்ளார். இருப்பினும், வேலை முடிந்து வீடு திரும்பிய தாய், குழந்தையின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்தார்.
பின்னர், அங்கிருந்த அவர்களது 7 வயது மகன் தனது தந்தை செய்த கொடூரத்தைக் கண்ணீருடன் விவரித்ததைத் தொடர்ந்து உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, கிருஷ்ணா ஜெய்ஸ்வால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மழலை வயதில் கல்வி கற்பதில் ஏற்படும் சிரமங்களை அன்பால் கையாளாமல், வன்முறையைப் பிரயோகித்து ஒரு பிஞ்சுயிரைப் பறித்த இந்தச் சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் நிலவ வேண்டிய விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு குறித்த விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது.
